தடை நீக்க கோரும் மனுக்களை உடனே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் - ஐகோர்ட்டு

இடைக்கால தடை உத்தரவை நீக்க கோரும் மனுக்களை உடனே விசாரணைக்கு பட்டியலிடும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு ஐகோர்ட்டு நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2022-10-22 23:48 GMT

இடமாற்றம்

கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலைசெய்யும் லட்சுமிபிரியா, பண்ருட்டி பள்ளிக்கூடத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றப்பட்டார். அதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடமாறுதலுக்கு இடைக்கால தடை பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஆசிரியர்கள் கூடுதலாக இருந்ததால், ஆசிரியை லட்சுமிபிரியாவை 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடைக்கால தடை

உள்நோக்கத்துடன் அல்லது தகுதி இல்லாத அதிகாரிகளால் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கும்போது, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம். ஆனால், நிர்வாக ரீதியில் நடைபெறும் இடமாற்ற நடவடிக்கையில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. அவ்வாறு தலையிட்டால், அது பொது நிர்வாகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அரசின் நிர்வாக பணியை ஐகோர்ட்டு மேற்கொள்ள முடியாது.

இடமாறுதல் உத்தரவுக்கு மனுதாரர் தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த தடையை நீக்கக்கோரி அரசு தரப்பில் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு 5 ஆண்டுகளாக ஒருமுறைகூட விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

உடனே விசாரணை

தடையை நீக்கக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்படும்போது, உடனே அதை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், தடை நீக்க கோரும் மனுவை பல ஆண்டுகளாக விசாரணைக்கு பட்டியலிடாமல் வைத்திருக்கும் ஒரு பழக்கம் இந்த ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் உள்ளது.

இந்த ஐகோர்ட்டு உத்தரவின்படி, தடை நீக்கக்கோரும் மனுவை உடனே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் கடந்த 2018-ம் ஆண்டே சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது.

தள்ளுபடி

எனவே இதுகுறித்து (பொறுப்பு) தலைமை நீதிபதியிடம் தகுந்த உத்தரவைப் பெற்று, தடையை நீக்க கோரும் அனைத்து மனுக்களையும் உடனடியாக விசாரணைக்கு பட்டியலிடும் நடவடிக்கையை ஐகோர்ட்டு பதிவுத்துறை மேற்கொள்ள வேண்டும். மனுதாரர் அதே பள்ளிக்கூடத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்து வருகிறார். எனவே, தற்போது அந்த பள்ளியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து கொள்ளலாம். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்