இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டி தரக்கோரி ஊர்பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-08-22 18:08 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 316 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 41 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 22 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்து 756 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பயணிகள் நிழற்குடை

தாந்தோணி ஒன்றியம், மேலப்பாளையம் கிராமம், வடக்குப்பாளையம் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் கடந்த 20 ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி நிழற்குடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துவிட்டார்.இதுகுறித்து போலீசில் புகார் செய்தபோது மீண்டும் கட்டித்தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை கட்டித்தரவில்லை. இதனை கண்டித்து கடந்த மாதம் 8-ந்தேதி மறியலில் ஈடுபட்ட எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நிழற்குடை இல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே புதிய நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு வேலை

கடவூர் வட்டம், கொள்ளுத்தண்ணிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தையல் தொழிலாளியான எனக்கு பிரீத்திஸ்ரீ, பிரவினாஸ்ரீ என்ற 2 மகள்களும், கதிர்வேல் என்ற ஒரு மகனும் உள்ளனர். எனது முதல் மகளான பிரீத்திஸ்ரீ வேங்காம்பட்டி என்ற ஊரில் எனது மாமியார் வீட்டில் தங்கி துளசிக்கொடும்பில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து, கடந்த 2020-2021-ம் ஆண்டில் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.பின்னர் கடந்த ஜூலை 17-ந்தேதி மீண்டும் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வரும் முன்பே, மனஉளைச்சலில் காணப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் எனது மாமியார் வீட்டில் கடந்த 11-ந்தேதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் நானும், எனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனது குடும்பத்திற்கு அரசின் மூலம் அரசு வேலை உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்