பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் மனு

பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-09-25 19:11 GMT

அனுமதி வழங்கக்கூடாது

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் வந்த அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், பெரம்பலூர் நகர் பகுதி ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடியில் திணறி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே போதிய அளவு ஆட்டோக்கள் உள்ளது.

தற்போது மாவட்டத்திற்கு புதிய ஆட்டோவுக்கு அனுமதி (பர்மிட்) வழங்கப்படுவதாக அறிகிறோம். போக்குவரத்து நெருக்கடியில் உள்ள நிலையிலும், ஏற்கனவே இயங்கி வரும் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது, என்று கூறப்பட்டிருந்தது.

மண்பாண்ட தொழில்

குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் கொடுத்த மனுவில், நன்னை கிராமத்தில் இருந்து பரவாய் கிராமம் வரை புதிதாக அமைக்கப்படும் சாலையை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள குலாலர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாடாலூர்-தெரணி சாலையில் வடபகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் குலாலர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்தப்பகுதியில் உள்ள எங்கள் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட காலிமனையில் கடந்த 2002-ம் ஆண்டில் அரசு மூலம் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. அந்த கழிவறைகள் தற்போது 7 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளன. இந்த நிலையில் தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கழிவறைகளை திறக்க வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் துர்நாற்றம் ஏற்படும். எனவே அந்த கழிவறைகளை முற்றியிலும் இடித்து, நாங்கள் சுகாதாரமாக வாழவும், எங்களின் குல தொழிலான மண்பாண்ட தொழிலை செய்வதற்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மொத்தம் 397 மனுக்கள்

வேப்பந்தட்டை தாலுகா, பில்லங்குளம் கிராம ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஊழல் செய்த பில்லங்குளம் ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்து, அவருடன் சேர்ந்து ஊழல் செய்த ஊராட்சி மன்ற செயலாளர், கிராம ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 397 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 780 வீதம் ரூ.27,800 மதிப்பிலான காதொலி கருவிகளையும், மேலும், வன்கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு சமையலர் உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

கந்து வட்டி கேட்பதாக பெண் புகார்

பெரம்பலூர் அருகே லாடபுரத்தை சேர்ந்த நாகம்மாள் தனது கணவர் பிச்சை, மகன் செல்வத்துடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், எனது வீட்டை குடும்ப செலவிற்கான கடந்த 2000-ம் ஆண்டு எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.20 ஆயிரத்தை பெற்று, அவருக்கு தவறாமல் வட்டி செலுத்தி வந்தேன். இந்த நிலையில் அந்த பெண் எங்கள் கிராமத்தை சேர்ந்த மற்றொருவருடன் சேர்ந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வீட்டை எழுதி கொடுத்து விட்டார். அந்த நபர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு எனது வீட்டை எழுதி கொடுத்து விட்டார். இந்த நிலையில் அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களை அனுப்பி எங்களை மிரட்டி அந்த வீட்டை விட்டு வெளியேற செய்து விட்டனர். இது தொடர்பாக அந்த தரப்பிடம் கேட்டால் ரூ.30 லட்சம் தந்தால் தான் வீட்டை தருவதாக கூறி வருகிறார். ரூ.20 ஆயிரம் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி போட்டு ரூ.30 லட்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்