செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்தது கோர்ட்டு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2024-07-18 14:26 GMT

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார்.இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் செந்தில்பாலாஜி புதிதாக 2 மனுக்களை தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 'சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது.எனவே, இந்த ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும். வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் கவுதமன், அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் என்.ரமேஷ், 'இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து தான் பெறப்பட்டது. விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதாடினார்.விசாரணை முடிவில், செந்தில்பாலாஜி தாக்கல் செய்த 2 புதிய மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில் பாலாஜியை 22-ந் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்