பட்டாசு குடோன் விபத்தில் பலியானஓட்டல் உரிமையாளரின் கணவர் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு

Update: 2023-08-03 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளரின் கணவர், தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

ஓட்டல் உரிமையாளர் புகார்

கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் அருகில் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி என்பவரும் பலியானார். இந்த நிலையில் அவருடைய கணவர் பாலமுருகன் தனது மகன், மகள், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

உண்மைக்கு புறம்பானது

அதில் நான் பழையபேட்டை காவிரி நகர் நேதாஜி சாலையில் வசித்து வருகிறேன். அதே பகுதியில் மரியபாக்கியம் என்பவருக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையை எனது மனைவி ராஜேஸ்வரி வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த கடையில் டிபன் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 29-ந் தேதி எதிர்பாராதவிதமாக எங்களின் கடை அருகில் இருந்த பட்டாசு குடோனில் விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் தரைமட்டமானது. இதில் எனது மனைவியும் பலியாகி விட்டார். இந்த விபத்து குறித்து கடை உரிமையாளர் மரியபாக்கியம் மகன் அந்தோணி ஆரோக்கியராஜ், டவுன் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதில் எங்கள் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தான் பட்டாசு கடை மற்றும் இதர கடைகள் இடிந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த புகார் உண்மைக்கு புறம்பானது.

உரிய நடவடிக்கை

எங்கள் கடையில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று போலீஸ் நிலையத்தில் உள்ளது. மற்றொன்று எங்களிடம் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே பொய் புகார் கொடுத்த அந்தோணி ஆரோக்கியராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்