கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்..! வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2023-07-06 10:58 GMT

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (32) இவர் மீது தாம்பரம் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது உள்ள கொலை வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இவருடன் சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகிய 3 பேர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர்.

அப்போது கோர்ட் அருகேயுள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர் அந்த வெடிகுண்டு டீக்கடையை ஒட்டியிருந்த சுற்றுசுவரில் பட்டு வெடித்தன. இதனால் அந்த டீக்கடையிலிருந்த அனைவரும் பதறியடித்து ஓடினர்.

பின்னர் லோகேசை மட்டும் குறிவைத்து துரத்திய கும்பல் மற்றொரு வெடிகுண்டை லோகேஷ் மீது வீசினர். இதனால் நிலைதடுமாறி விழுந்த லோகேஷை அந்த கும்பல் தலை பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.

கொலை செய்யப்பட்ட லோகேஷின் அண்ணன் பாட்சி என்ற பாஸ்கரன் என்பவர் கடந்த 2015-ம் வருடம் பாலாஜி என்பவரை கொலை செய்துள்ளார். இதனால் பாலாஜியின் கூட்டாளிகள் பாஸ்கரனை அதே வருடம் கொலை செய்து பழிக்கு பழி தீர்த்தனர். இதன் தொடர்ச்சியாக தனது அண்ணனை செய்தவரை கடந்த 2016-ம் வருடம் லோகேஷ் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கு சம்மந்தமாக பீர்க்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த போது தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளன.

மேலும் நேற்று நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்திருந்த லோகேஷ் அவர் மீதுள்ள வழக்கின் சாட்சிகள் அனைவரையும் சமாதானம் செய்து விட்டு தனக்கு சாதகமாக சாட்சி சொல்ல அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குள் லோகேஷ் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்