நவராத்திரி திருவிழாவில் இரவில் தங்கி வழிபட அனுமதி வழங்க வேண்டும்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு இரவில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-04 18:45 GMT

வத்திராயிருப்பு

நவராத்திரி திருவிழா

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

பல ஆண்டுகளாக ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழாவை சுந்தரபாண்டியம் ஏழூர் சாலியர் சமுதாய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வனத்துறை அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 15-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

அனுமதி வழங்க கோரிக்கை

இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து சுந்தரபாண்டியம் சாலியர் சமூக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சுந்தரபாண்டியம் நவராத்திரி திருவிழா குழு தலைவர் சடையாண்டி கூறியதாவது,

10 நாள் திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் இரவில் தங்கி திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி தர வேண்டும். மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊர் மக்களுக்கு மொத்தம் 350 பேர் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மேலும் 10 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். திருவிழாவிற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்