பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில்15-வது பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி மாவட்ட அளவில், பல்கலைக்கழக அளவில் சாதனை பெற்ற இக்கல்லூரி மாணவிகளின் சாதனைகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார். விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கி, விழாவினைத் தொடங்கி வைத்து பேசுகையில், கல்வி மட்டுமே ஒருவரை பண்புள்ளவர்களாக மாற்றும். கல்வியறிவு பெற்றவர்களே சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகப் போற்றப்படுவார்கள். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.திறமையோடும் தன்னம்பிக்கையோடும் உண்மையோடும் செயல்பட்டால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார். விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 2016-2019-ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமேற்படிப்பு முடித்த 692 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, உறுதிமொழி ஏற்க வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், உலகளாவிய தமிழ்மொழியைப் பிழையற கற்க வேண்டும். மொழி அறிவோடு பொது அறிவையும் ஆங்கில அறிவையும் பெற்றால் மட்டுமே போட்டிகள் நிறைந்த இவ்வுலகை வெற்றிகொள்ள முடியும்'என்று தெரிவித்தார். ஆங்கிலத் துறைத்தலைவர் ராமேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். விழா ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவர் கனகாம்பாள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர். தமிழாய்வுத்துறைத் தலைவர் கோகிலா நன்றி கூறினார்.