தமிழகம் முழுவதும் 3,500 பார்கள் ஏலம் விடப்படவில்லை:டாஸ்மாக் கடை மூலம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி முறைகேடு நடக்கிறது

தமிழகம் முழுவதும் 3,500 பார்கள் ஏலம் விடப்படவில்லை என்றும், டாஸ்மாக் கடை மூலம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி முறைகேடு நடக்கிறது என்றும் தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-06-24 18:39 GMT

மேச்சேரி

டப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சூரப்பள்ளி, சவரியூர், தோரமங்கலம், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்தார். அவருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க.வினர் 523 வாக்குறுதிகளை அறிவித்து விட்டு அதில் ஒருசிலவற்றை நிறைவேற்றி உள்ளனர். மற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அ.தி.மு.க. அரசின் திட்டங்கள்

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட 100 ஏரிகள் திட்டம், அம்மா மினி கிளினிக், இலவச மடிக்கணினி, தாலிக்கு தங்கம், ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காகவே அந்த திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. அட்சி அமைந்தவுடன் அந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும். அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்குவதுதான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.

தி.மு.க. அரசு மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி உள்ளது. சேலம் மாவட்டத்துக்கு தி.மு.க. அரசு எந்தவொரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்து கலைஞர் என பெயர் வைத்துள்ளார்கள். மேச்சேரி- ஓமலூர் நான்குவழிச்சாலை, சேலம் சட்டக்கல்லூரி உள்ளிட்டவை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ரூ.3,600 கோடி முறைகேடு

தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யாத முதல்- அமைச்சர், பீகாருக்கு சென்று பிரதமரை தேர்வு செய்ய போகிறாராம். கருணாநிதிக்கு ரூ.81 கோடியில் மக்கள் வரிப்பணத்தில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதில் ரூ.2 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைத்து விட்டு மீதமுள்ள ரூபாய்க்கு தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

அ.தி.மு.க.வில் சாதாரண உறுப்பினரும் பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் அவ்வாறு வர முடியுமா? தி.மு.க. அரசு அமைந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 3,500 பார்கள் ஏலம் விடப்படவில்லை. டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்கின்றனர். ஆண்டுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.3,600 கோடி முறைகேடு நடக்கிறது. இந்த பணம் எங்கே போகிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ேவண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்