அடிப்படை வசதிக்காக ஏங்கும் மக்கள்

அடிப்படை வசதிக்காக விருத்தாசலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் ஏங்கி வருகின்றனர்.

Update: 2023-01-31 18:45 GMT

விருத்தாசலத்தில் 33 வார்டுகள் உள்ளன. நகரப்பகுதியில் நிலவும் மக்களின் பிரச்சினைகளை வாரந்தோறும் (புதன்கிழமை) வார்டு வாரியாக அலசி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 17-வது வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

இந்த வார்டில் கடலூர் சாலை, செல்வராஜ் நகர், விவேகானந்தர் வீதி, வடக்குப்பெரியார் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. 902 ஆண் வாக்காளர்கள், 922 பெண் வாக்காளர்கள் உள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், வி.சி.எம்.எஸ். வங்கி உள்ளிட்டவையும் இந்த வார்டில்தான் உள்ளன.

கழிவுநீரால் துர்நாற்றம்

விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து செல்வராஜ் நகர் செல்லும் பாதை மண் சாலையாக உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வாராததால் குப்பைகளுடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. செல்வராஜ் நகர் மற்றும் தென்றல் தெருவில் உள்ள தொட்டிகள் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. அண்ணா நகரில் இருந்து செல்வராஜ் நகர் செல்லும் வழியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயின் சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். விவேகானந்தர் வீதிக்கு செல்ல சாலை வசதி இல்லை. சிறுபாலம் சேதமடைந்துள்ளதால் அவசர காலங்களில் வாகனங்கள் விவேகானந்தர் வீதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதி இல்லை

விவேகானந்தர் வீதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வடக்கு பெரியார் நகர் யமுனை வீதி முழுவதும் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களில் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

வடக்குபெரியார் நகரில் சாலை அமைத்து பல ஆண்டுகளாகி விட்டது. கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் கழிவுநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரம் தயாரிக்கும் கூடம்

வார்டு பிரச்சினைகள் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது

வடக்குபெரியார் நகர் விக்னேஷ்வர்:-

வடக்கு பெரியார் நகர் கங்கை வீதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் குடிப்பதற்கு ஏற்ற குடிநீரை வினியோகிக்க வேண்டும். இரவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் காலி மனைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தி பெருகி நோய் பரவும் அபாய நிலை நிலவி வருகிறது. குடிநீர் தொட்டி நிரம்பியவுடன் மின்மோட்டரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் தொட்டி அருகில் உள்ள உரம் தயாரிக்கும் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

குழாய் உடைப்பு

செல்வராஜ் நகர் மதிராஜன் :-

கழிவுநீர் கால்வாய் ஓரமாக புதைக்கப்பட்ட குழாய் உடைந்துள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவிடுகிறது.. இதனால் துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது. இதை குடிப்போருக்கு நோய் ஏற்படுகிறது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும். சாலை வசதி இல்லாததால் தீயணைப்பு வாகனங்களோ, 108 ஆம்புலன்ஸ் வாகனமோ உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த சிறு பாலங்களை சீரமைத்துத்தர வேண்டும்.

பயன்பாட்டுக்கு வராத பாலம்

விவேகானந்தர் வீதி நடராஜ்:-

விவேகானந்தர் வீதியில் சாலை வசதி இல்லை. அப்பகுதியில் அமைந்துள்ள ஓடையை கடந்து செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. சாலையை இணைத்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் அண்ணா நகர் வழியாக பிணத்தை எடுத்து கொண்டு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதை அமைத்து சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

வார்டு கவுன்சிலர் கூறுவது என்ன?

17-வது வார்டு கவுன்சிலர் ஆட்டோ பாண்டியன் (தி.மு.க.):-

வடக்கு பெரியார் நகரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடம் மீட்கப்பட்டு ரூ.1 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் நகரில் குறவர் காலனி செல்லும் வழியில் சிறுபாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்குபெரியார் நகரில் யமுனை வீதியில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. மற்ற வீதிகளில் கழிவுநீர் கால்வாயுடன், கூடிய சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். செல்வராஜ் நகர் விரிவாக்கம் பகுதியில் 20 ஆண்டுகளாக நகராட்சி மூலம் தெருமின் விளக்கு, மின்கம்பி அமைத்துத்தர வில்லை. இதனையும் அமைத்து அப்பகுதிக்கு தெருமின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



Tags:    

மேலும் செய்திகள்