சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பிய மக்கள்: தாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

Update: 2024-04-22 02:19 GMT

தாம்பரம்,

நாடாளுமன்ற தேர்தலுடன், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். தேர்தலில் வாக்களித்துவிட்டு, 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே பலரும் கார் மற்றும் பஸ்களில் மீ்ண்டும் சென்னைக்கு திரும்பி வந்தனர். இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு சொந்த ஊர்களிலிருந்து புறப்பட்ட மக்கள், இன்று காலை சென்னை வந்தடைந்தனர். இதனால் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் தாம்பரம் வந்த மக்கள், தங்களது இருப்பிடங்களுக்கு செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையம் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அத்துடன், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்