சேறும், சகதியுமான சாலைகளால் மக்கள் அவதி
வேலூரில் சேறும், சகதியுமான சாலைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. வேலப்பாடியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலைக்கு செல்லும் பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். வேலூர் சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.
மேலும், நகரின் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக உள்ளது. சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் பலர் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவை தாண்டியும் பெய்தது.. அவ்வப்போது இடைஇடையே சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் மாறி, மாறி கொட்டித்தீர்த்தது.
நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
காட்பாடி- 15, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி- 24, வேலூர்-- 27.8, குடியாத்தம்-- 37, மேலாலத்தூர்- 51.2, பொன்னை 72.6.