அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி
காரியாபட்டி அருகே அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அடிப்படை வசதி
காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சி ஊராட்சி, நாசர்புளியங்குளம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், சாலை வசதி, மயானத்திற்கு செல்லும் சாலை வசதிகள் ஆகியவை சரியாக இல்லை. அதிலும் குறிப்பாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாசர்புளியங்குளம் கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பைப் லைன் பதிக்கப்பட்டது. ஆனால் 2 மாதங்கள் மட்டுமே வந்த தாமிரபரணி குடிதண்ணீர் 4 ஆண்டுகளுக்கு மேலாக வராமல் உள்ளதாகவும், இதனால் உப்பு தண்ணீரை குடித்து வருவதால் உப்பு சத்து, கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் அவதி
மேலும் சாலைகள் சரியாக போடாத காரணத்தினால் பள்ளி, மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களை ஏற்ற அரசு பஸ்கள் வர மறுப்பதாகவும், அதிலும் குறிப்பாக கர்ப்பிணி மற்றும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரமுடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.