சொந்த ஊர்களுக்குச் செல்ல முண்டியடிக்கும் மக்கள்... ரெயிலில் தொங்கியபடி செல்லும் பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

Update: 2022-10-21 14:16 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் ஏராளமானோர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூரில் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களுடன் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரெயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்