காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

குத்தாலம் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-06-04 17:09 GMT

குத்தாலம்;

குத்தாலம் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சினை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் தென்நச்சினார்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று சில நாட்களுக்கு முன்பு முடிவுற்றது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தங்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கும்பகோணம்- தரங்கம்பாடி சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அவர்கள் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது கழிவறை கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலையூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம்- தரங்கம்பாடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்