பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியல்

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-09 18:06 GMT

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ராதாநல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்டின் (வயது42). தொழிலாளி. இவர்  நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து ஊசி போட்டுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என்று கூறி உள்ளார். உடனே அங்கு இருந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டினர்.

சாலை மறியல்

இதனால் பாஸ்டினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நன்னிலம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

இந்த நிலையில் பாஸ்டின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை தரும்படி போலீசாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை தர முடியாது என்று கூறியதால் பாஸ்டின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் பாஸ்டின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அவர்களிடம் போலீசார் மற்றும் குடவாசல் வர்த்தக நல கழக தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுமூகமாக பேசி உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக திருவாரூர்- நன்னிலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்