தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் பணம் வசூலித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-01-30 14:02 GMT

கோவை,

கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதாவது, அந்த செயலி மூலம் வரும் வீடியோவில் சில கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால், நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தின் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தனர். அத்துடன் ஏராளமானவர்கள் செயலி மூலம் பணமும் செலுத்தி உறுப்பினர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில், இந்த நிறுவனம் எந்தவொரு வருவாயும் இல்லாமல் பணத்தை பெற்று, அதில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகப்படியான லாபத்தொகையை எப்படி கொடுக்க முடியும் என்றும், இது பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் நிறுவனம் எவ்வித மோசடியும் செய்யவில்லை என்றும், தனியார் நிறுவனம் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் நேற்று காலையில் வாகனங்கள் மூலம் கோவையை நோக்கி வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வாகனங்களில் வந்ததால் கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அவர்கள் அனைவரும் கோவை நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகர துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யநாதன் மற்றும் அங்கு திரண்டிருந்த உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அங்கு குவிந்தவர்கள் இந்த நிறுவனம் மூலம் பலருக்கு வருவாய் கிடைத்து வருகிறது, பொதுமக்கள் யாரையும் ஏமாற்றவில்லை. எனவே தவறான புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் அந்த நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதுடன், பொய் புகார் அளித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில், கோவை நீலாம்பூரில் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட 5,000 பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்