வைகை அணையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

வைகை அணையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

Update: 2022-06-09 16:58 GMT

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அணை நிரம்பிய நிலையிலேயே இருந்ததால் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையில் மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல்களில் அணை நீர்தேக்க பகுதிக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அப்போது ஜிலேபி, ரோகு, மிருகால் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் பிடிபட்டன. இதில் ஜிலேபி ரக மீன்கள் அதிகம் பிடிபட்டது. பொதுவாக வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கும் குறைவான மீன்களே கிடைத்த நிலையில் தற்போது 700 கிலோவாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்