குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

காரமடை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-09 19:30 GMT

காரமடை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் இல்லை

காரமடை அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த ஊராட்சிக்கு தேவையான குடிநீர் பவானி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 12-வது வார்டுக்கு உட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தேக்கம்பட்டிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து, காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி துணை தலைவர் தங்கராஜ், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்