குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து 5 டிராக்டர்களை குப்பைகளுடன் பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-17 04:51 GMT

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட வெங்கத்தூர், ஒண்டிக்குப்பம், பட்டரை, எம்.ஜி.ஆர்.நகர் போன்ற சுற்று வட்டாரப்பகுதிகளில் சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் கொண்டு வந்து அதனை மணவாளநகர் கணேசபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டி வந்தனர். இந்த நிலையில் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டத்தையடுத்து மேற்கண்ட இடத்தில் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கத்தூர் கன்னிமாநகர் பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டது.

தினந்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தோல் நோய் உள்பட பல வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று 5-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் கன்னிமாநகர் பகுதியில் கொட்ட வந்தனர். இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் டிராக்டர்களை சிறை பிடித்து குப்பை கொட்ட எதிப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், பா.ம.க மாநில நிர்வாகி வ.பாலா என்கிற பாலயோகி, துணை தாசில்தார் சுந்தர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் மணவாளநகர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வெங்கத்தூர் கன்னிமாநகர் பகுதியில் குப்பையை கொட்ட மாட்டோம் என உறுதியளித்து 5 குப்பை டிராக்டர்களையும் திரும்பவும் அனுப்பி அனுப்பினார்கள். தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்