குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கருக்கல்வாடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2023-07-21 20:44 GMT

தாரமங்கலம்:-

கருக்கல்வாடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டது.

சாலை மறியல்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடி ஊராட்சி நேருநகர் பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 32 நாட்களாக காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்த பகுதிக்கு தற்காலிகமாக இரும்பாலை பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இருந்த போதிலும் போதுமான குடிநீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் தாரமங்கலம்- இரும்பாலை மெயின்ரோட்டில் திரண்டனர். அங்கு அம்மன் தியேட்டர் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, ஓமலூர் தாசில்தார் புருஷோத்தமன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணி முடிக்கப்பட்டு அனைவருக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் தாரமங்கலம்- இரும்பாலை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்