மின்கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தரகம்பட்டி அருகே மின்கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 19:02 GMT

சாலைமறியல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே கடவூர் வடக்கு தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கடவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடவூர் வடக்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் காற்றின் காரணமாக முறிந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்துள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திண்டுக்கல்- பாலவிடுதி சாலையில் அமர்ந்து மின்கம்பத்தை உடனடியாக மாற்றம் செய்து மின்வினியோகம் வழங்கி, குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, கடவூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், கடவூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்லமுத்து, ஊராட்சி செயலாளர் ஸ்ரீரங்கன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மின்கம்பத்தை மாற்றி, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பாலவிடுதி - திண்டுக்கல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்