திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-16 08:47 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பில் ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் 3 மகளிர் சுய உதவி குழுக்கள், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஒரு வட்டார அளவிலான கூட்டமைப்பு, ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 3 மகளிர் சுய உதவி குழுக்கள், ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருத்திற்காக தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே 2022-23-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதினை பெற சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு பெருங்கடன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள் சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்கு பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை தொகுத்து உரிய படிவத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து 21-04-2023-க்குள் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்