கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கம்பாலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கம்பாலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமை தாங்கினார்கள்.
குறிப்பாக பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளில் 512 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வடக்கு ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகளில் 877 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போராட்டம்
இதற்கிடையில் ஆனைமலை ஒன்றியம் கம்பாலப்பட்டி ஊராட்சி பூவலபருத்தியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒன்றிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மதுக்கடையை அகற்ற கோரி 3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே கிராம சபை கூட்டத்தை நடத்த விடுவோம் என்றனர். அதற்கு அதிகாரிகள், கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது.