வடகாடு பகுதியில் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள் தீவிரம்

வடகாடு பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகளில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-10-29 18:20 GMT

கஜா புயலின் தாக்கம்

வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த நிலையில் இருந்து வரும் தங்களது வீடுகளை சீரமைப்பு செய்யும் பணிகளில் பொதுமக்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் தாக்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அதன் பாதிப்பில் இருந்து இன்னமும் முழுமையாக மீள முடியாத நிலையில் ஏராளமான விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை

கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏராளமான வீடுகளும் இன்னும் விரிசல் கண்டும் சிதிலமடைந்த நிலையிலும் இருந்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர முந்தைய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதுவும் அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும், மீண்டும் புயல் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தாலும் வீடுகளில் பழுது நீக்கம் பணிகள் மற்றும் கீற்று மேயும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் பழுதடைந்த கூரை வீடுகளை அனைவரும் சீரமைத்து வருவதால் தென்னங்கீற்றின் விலையும் அதிக அளவில் இருக்கிறது. வீடு சீரமைப்பு பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்