ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் நேர்காணல் செய்து கொள்ளலாம்

கருவூலங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் நேர்காணல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-29 19:23 GMT

பெரம்பலூரில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சார்நிலை கருவூலங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர நேர்காணல் நடைமுறையில் பழைய நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டு நாளை (சனிக்கிழமை) முதல் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் நேர்காணல் செய்து கொள்ளலாம். அதன்படி நாளை முதல் தொடங்க இருக்கும் ஓய்வூதியர் நேர்காணல் தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். சிவில் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் சிவில் ஓய்வூதியதாரரின் ஓய்வு பெற்ற மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். ஓய்வூதியர்கள் நேர்காணல் செய்ய வேண்டிய மாதம் மற்றும் சலுகை காலமான அதற்கு அடுத்த மாதமும் நேர்காணல் செய்யாதவர்களின் ஓய்வூதியம் அதற்கு அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும்.

மேலும் சிறப்பு நேர்வாக கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நேர்காணல் செய்யப்பட வேண்டியவர்கள் ஜூலை மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் தொடங்கப்பட்டவர்கள் முறையே வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நேர்காணல் (நிதியாண்டு முடிவதற்கு முன்பாக) செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னதாக நேர்காணல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியதாரர்கள் தங்களின் நேர்காணலை ஐ.பி.பி.பி. சேவை, இ-சேவை மையம், பொது சேவை மையம், ஓய்வூதியர் சங்கங்களின் ஜீவன் பிரமானுடன் இணைக்க பெற்ற பயோமெட்ரிக் சாதனம் மூலமாகவும் மற்றும் கருவூலங்களில் நேரடியாகவும் நேர்காணல் செய்து கொள்ளலாம். நேர்காணலின் போது ஆதார் அட்டை, ஓய்வூதிய புத்தகம், வங்கி பாஸ் புத்தகம், செல்போன் எண் போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதளத்தில் அரசாணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு விதிகளின் படி நேர்காணலில் கலந்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியத்தை நிறுத்தம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, வாழ்நாள் சான்றினை உரிய காலத்திற்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகங்களில் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்