வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி புழுக்கள் இருந்தால் அபராதம்

வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தும் தண்ணீரில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-08-26 19:20 GMT

சிவகாசி, 

வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தும் தண்ணீரில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள பணியாளர்கள்

இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை தோன்றும் சூழ்நிலை உள்ளதாலும், அவ்வப்போது வெப்பசூழ்நிலை மாறி வரும் காரணத்தாலும் மழை பெய்கிறது. அப்போது வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் சிரட்டை, ஆட்டுரல், பயன்படுத்தாத பொருட்கள், தண்ணீர் குடங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்கி நாளாகும் பட்சத்தில் கொசுப்புழுக்கள் உருவாகி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட களபணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் கொசுப்புழு கண்டறிந்த இடங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.22 ஆயிரம் அபராதம்

இதேபோல் காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் கொசுமருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடைகளில் பாதுகாப்பற்ற முறைகளில் வைக்கப்பட்ட பழைய பொருட்களில் தேங்கி இருந்த தண்ணீரில் கொசுப்புழு கண்டறியப்பட்ட 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தும் குடிநீரில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் வரும் போது அவர்களுக்கு தேவை யான ஒத்துழைப்பை பொது மக்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்