முத்திரையில்லா எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம்-தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
முத்திரையில்லா எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் எச்சரித்துள்ளார்.
ஆய்வு
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் முதல் சரக, தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன், இரண்டாம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன், மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சந்திரமதி ஆகியோர் கரூர், குளித்தலை, மணப்பாறை பகுதிகளில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்பு கடைகள் மற்றும் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, இனிப்பு கடை என மொத்தம் 47 நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டதில் 20 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டன.
அபராதம்
பொட்டல பொருட்களின் உரிய விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்கள் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உண்டு. தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வரிடம் உரிய காலத்தில் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும், 2-வது முறையாக கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
உரிய நடவடிக்கை
இதேபோல் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதில் குழந்தை தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.