கொட்டாம்பட்டி அருகே பயங்கரம்-பாலியல் ெகாடுமை செய்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை- அக்காள் மகன் கைது
கொட்டாம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர்.
27 வயது பெண்
மதுைர மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 27 வயது பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் தந்தை இறந்து விட்டதால் தாய் பராமரிப்பில் இருந்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு பெண்ணின் தாயார் வெளியூரில் உள்ள தனது மற்றொரு மகள் வீட்டிற்கு சென்று விட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நேற்று அந்த இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பாலியல் துன்புறுத்தல்
மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரிபோனி, இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பெண்ணின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான பெண்ணின் உள்ளாடை கலைந்த நிலையில் காணப்பட்டதால் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். மதுரை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தும் நேரில் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அக்காள் மகன் கைது
இறந்த பெண்ணின் அக்காள் மகனான 21 வயது வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரின் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு அந்த வீட்டிற்கு வாலிபர் சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், வாலிபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். அந்த பெண் கூச்சலிட்டார்.
இதனால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்று வாளியில் இருந்த தண்ணீரில் கத்தியை கழுவி மீண்டும் கத்தியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.