காத்திருப்பு அறை இல்லாததால் நோயாளிகள் அவதி

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-26 20:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நோயாளிகள் அவதி

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். வெளி நோயாளிகள் பிரிவில் மட்டும் தினமும் 400 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் முதியோர் உள்பட நீண்ட நாள் வியாதி உள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் வெளி நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் காத்திருப்பு அறை இல்லை. இதனால் நோயாளிகள் மழை மற்றும் வெயிலில் திறந்த வெளியில் போடப்பட்டு உள்ள இருக்கையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் மழைக்கு ஒதுங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

மேம்படுத்த வேண்டும்

ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகவும், கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாகவும் மாற்றப்பட்டு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த படாமல் உள்ளதால், நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக ஊட்டி அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அனைத்து வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு கட்டிடங்களுடன், நோயாளிகள் காத்திருப்பு அறை அமைக்க வேண்டும். மேலும் ஆஸ்பத்திரியை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்