அரசு பஸ் விராலிமலைக்கு வர மறுத்ததால் பயணிகள் வாக்குவாதம்

திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் விராலிமலைக்குள் வர மறுத்ததால் கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-22 18:48 GMT

வாக்குவாதம்

திருச்சியில் இருந்து மதுரைக்கு நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த 5 பயணிகள் இருந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் விராலிமலைக்கு பயண சீட்டை கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டர் இந்த பஸ் ஒன் டூ ஒன் எனவே விராலிமலைக்குள் செல்லாது என கூறியுள்ளார்.

அனைத்து பஸ்களும் விராலிமலைக்குள் செல்ல வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவு நகல் உள்ளது என விராலிமலையை சேர்ந்த பயணிகள் கூறியுள்ளனர். அதனையும் கண்டக்டர் ஏற்க மறுத்ததால் விராலிமலை பயணிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மன உளைச்சல்

இதற்கிடையில் பஸ் வந்தபோது நிலைமையை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் பஸ்சை தேசிய நெடுஞ்சாலையில் இயக்காமல் விராலிமலைக்குள் சென்று கடைவீதி நிறுத்தத்தில் நிறுத்தினார். அப்போது மீண்டும் கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பயணிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் மாவட்ட கலெக்டரின் உத்தரவு நகலை கண்டக்டரிடம் காண்பித்ததை தொடர்ந்து பயணிகளை இறக்கி விட்டு அதன் பிறகு டிரைவர் மதுரைக்கு பஸ்சை இயக்கினார்.

விராலிமலைக்குள் அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவு இருந்தும் இதுபோன்று ஒரு சில அரசு பஸ்கள் தொடர்ந்து விராலிமலைக்குள் வர மறுப்பதால் விராலிமலை பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுவதோடு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களும் விராலிமலைக்குள் வந்து செல்வதோடு மட்டுமின்றி சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்