குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம்; கலெக்டர் பேச்சு

குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

Update: 2023-10-18 17:29 GMT

குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம், சின்னாரம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் எந்தெந்த பகுதிகளில் மக்கள் தேவைகளை கருதி கட்டிடங்கள் இல்லையோ அங்கெல்லாம் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நமது மாவட்டத்தை பொறுத்தவரை பாலின வித்தியாசம் அதிகமான அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் சில நபர்கள் பெண் குழந்தை வேண்டாம் என நினைக்கிறார்கள்.

திருமணத்தில் கலந்துகொள்வதும்...

மேலும் பிறக்கின்ற குழந்தை ஆணா? பெண்ணா? என்று பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் தவிர்க்க வேண்டும்.

குழந்தை திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்களோ, யாரெல்லாம் முன்னின்று திருமணத்தை நடத்துகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். குழந்தை திருமணத்தில் வீட்டிற்கு சென்று வந்தாலும், உணவு அருந்தினாலும், மொய் மட்டும் வைத்துவிட்டு வந்தேன் என்றாலும் தண்டனை உண்டு. ஆகவே குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வதும், குழந்தை திருமணத்தை சொல்லாமல் இருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன், ஒன்றிய ஆணையாளர்கள் கே.எம்.நேரு, விநாயகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவிகாமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்