அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-05-24 17:08 GMT

சென்னை,

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக 'அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்' கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் ரூ.5,000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.

பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 11 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பெருங்கொடுமையாகும். இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பெருமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று அதிகாரிகளால் உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் தொடர்கதையாகிப்போனது வேதனையின் உச்சம்.

அதுமட்டுமின்றி, இவர்களைப் பணியமர்த்துவது தொடர்பான இரு அரசாணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றித் தருவதற்குகூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு சிறப்பாசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு சிறப்பாசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், இதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

பின்னர் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இருபள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர சிறப்பாசிரியர்களையே, ஆசிரியர் இல்லாத வகுப்புகளையும் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், தேசத்தின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கைக்காக பகுதிநேர ஆசிரியர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்