பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-10-15 20:08 GMT

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.

இதனால் அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோட்டில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது. சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதன் காரணமாக அந்தியூர்-மைசூரு மலைப்பாதையில் சுமார் 8 மணி நேரம் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் பர்கூர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்