திருமூர்த்திமலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

திருமூர்த்திமலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடிக்ைக எடுக்கப்படுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2023-04-15 14:27 GMT

திருமூர்த்திமலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடிக்ைக எடுக்கப்படுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மூர்த்திகள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோவிலுக்கு வருகின்ற வழியில் திருமூர்த்திஅணை, சிறுவர் பூங்கா, நீச்சல்குளம், படகு இல்லம், வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பார்க்கிங் வசதி இல்லை

வார மற்றும் பொது விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் வருகின்ற கார், பஸ், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

திருமூர்த்திமலையின் இயற்கை சூழலை ரசித்து மகிழவும், பஞ்சலிங்க அருவியில் விழும் மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறவும் நெடுந்தொலைவில் இருந்து வாகனங்கள் மூலமாக இங்கு வருகை தருகிறோம். எங்களது வாகனங்கள் திருமூர்த்தி மலை பகுதியில் நுழைவதற்கு ஒப்பந்ததாரர் மூலமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு முறைப்படியாக பார்க்கிங் வசதி செய்து தருவதில்லை.

இதனால் சாலையின் ஓரங்களிலும் கோவிலுக்கு முன்புற பகுதியில் நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுவதால் திரும்பிச் செல்லும் போது கால நேரம் விரயம் ஆகிறது. அதுமட்டுமின்றி இட நெருக்கடியான சூழலில் வாகனங்கள் திருப்பப்படும் போது அவை ஒன்றுடன் ஒன்று மோதி சிறு சிறு விபத்துகளும் நேரிடுகிறது. இதனால் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

வேதனை அளிக்கிறது

விடுமுறையை பயனுள்ளதாக கொண்டாட நினைத்து நிம்மதியை தேடி வந்த எங்களுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் ஏமாற்றமும் மனஉளைச்சலும் ஏற்படுகிறது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நிர்வாகம் அதை நிறுத்துவதற்கு முறைப்படியாக பார்க்கிங் வசதியும் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

அதை தவிர்த்து கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சுற்றுலா பயணிகளை அலட்சியப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. எனவே திருமூர்த்தி மலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்