கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பரிவேட்டை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-10-24 18:45 GMT

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை தொடர்ந்து பல வகையான கலை நிகழ்ச்சிகள், இரவில் வாகன பவனி போன்றவை நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதைெயாட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், சந்தனம், களபம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

பகல் 1.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் நகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை, நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தையம் ஆட்டம், சிலம்பாட்டம் போன்றவை இடம்பெற்றன. வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கணம் சார்த்தி அம்மனை வழிபட்டனர்.

பரிவேட்டை ஊர்வலம் இரவு 7.30 மணியளவில் மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு பகவதி அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர்.

பின்னர், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையை நோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

பரிவேட்டை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீதசந்தான கோபால கிருஷ்ணசாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. பின்னர், அம்மன் வாகன பவனி மகாதானபுரம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.

பின்னர், அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்காரமடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

இரவு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். பரிவேட்டை திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்