பேரம்பாக்கம் பள்ளியின் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்-மாணவர்கள் போராட்டம்

பேரம்பாக்கத்தில் இடையூறு ஏற்படும் என்பதை காரணம் காட்டி பள்ளியின் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-15 07:46 GMT

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் பெருமாள் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை அறிந்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி அருகே ரேசன் கடை கட்டுவதால் கூட்ட நெரிசல் மற்றும் இறைச்சல் உட்பட பல்வேறு இடையூறுகள் மாணவர்களுக்கு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ரேஷன் கடை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்ததை தொடர்ந்து ரேஷன் கடை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ரேஷன் கடை கட்டுவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்றது.

இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இங்கு ரேஷன் கடை கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில பெற்றோர்கள் பள்ளியில் இருந்த தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா விரைந்து வந்தார்.

அவரை முற்றுகையிட்ட பெற்றோர்கள் பள்ளி அருகே இட நெருக்கடியான இடத்தில் ரேஷன் கடை கட்டுவதால் பள்ளியில் பயிலும், மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது. அவர்களின் கல்வியும் வெகுவாக பாதிக்கும் என்று தெரிவித்தனர். எனவே இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டக்கூடாது வேறு இடத்தில் கட்ட வேண்டுமென கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு விரைந்து வந்த மப்பேடு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வைத்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பேரம்பாக்கத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்