மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமனம், கழிப்பறை வசதி கோரி மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-10 18:23 GMT

அரசு பள்ளி

புதுக்கோட்டையில் வடக்கு ராஜ வீதியில் அரசு உயர் ெதாடக்கப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 796 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லை. இதனால் அருகில் நகர்மன்றத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகள் வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு கூடுதலாக கட்டிட வசதி கோரி பள்ளி தரப்பில் இருந்தும், பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு தரப்பில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். பள்ளியின் வளாகத்தில் இருந்த பழைய தொடக்க கல்வி அதிகாரி அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. பொதுப்பணித்துறைக்குரிய அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் எதுவும் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதற்கிடையில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஆசிரியர்களும் இல்லை. தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 9 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் மொத்தம் 26 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்க கோரியும், மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறை வசதி, கழிப்பறை வசதி கோரி குழந்தைகளுடன் பெற்றோர் தரப்பிலும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பள்ளியின் அருகே இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களுடன் மாணவ-மாணவிகள் சிலர் சீருடையில் அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர்குருநாதன் (டவுன்) மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்தனர். வருகிற 18-ந் தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்