பரந்தூர் விமான நிலையம் - டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு

பரந்தூர் விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-09 05:17 GMT

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது இந்த விமான நிலையம்.

பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில்,பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் இம்மாதம் 6-ஆம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது.

விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது.

Tags:    

மேலும் செய்திகள்