மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சித்த மருத்துவர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சித்த மருத்துவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பாளையத்தில் அருகே சித்தமருத்துவம் பார்த்து வருபவர் கொல்கத்தாவை சேர்ந்த தேவகுமார் சங்கரி(வயது 31). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்றுவிட்டு மீண்டும் பாளையம் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதாமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதில் அவரது தலை மற்றும் உடலில் அடிபட்டுள்ளது.ரத்தம் எதுவும் வராததால் வீட்டில் சொல்லாமலும்,மருத்துவமனை செல்லாமலும் இருந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை அவருக்கு உடம்பு முழுவதும் பலத்த வலி ஏற்பட்டதையடுத்து வேடசந்தூரில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வரும் தனது நண்பரான பிஸ்வாசுக்கு தகவல் கொடுத்து அவரை வந்து பார்க்க சொல்லி உள்ளார்.அவர் உடனடியாக பாளையம் சென்று நண்பரைச் சந்தித்து விசாரித்த பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தது தெரிய வந்தது.
மேலும் நண்பர் பிஸ்வாஸ் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்கலாம் என்று அறிவுரை கூறியும் ஒன்றுமில்லை வாயு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று ஒரு மெடிக்கலில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திடிரென நெஞ்சு வலி வந்ததால் அவரும் நண்பர் பிஸ்வாசும் அருகில் உள்ள ஒரு தனியார் மெடிக்கலில் பரிசோதனை செய்துள்ளனர்.அப்போது அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை நன்றாக உள்ளார் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென மயக்கமடைந்து தேவகுமார் சங்காரி கீழே விழுந்துள்ளார்.உடனே அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சித்த மருத்துவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.