மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் கிளிகள்
ஆலங்குளம் அருகே கிளிகளால் மக்காச்சோளம் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே கிளிகளால் மக்காச்சோளம் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி
ஆலங்குளம் அருகே உள்ள தொம்ப குளம், ஆர்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்த மக்காச்சோளம் முளைத்து ஒரு மாத பயிராக இருந்தபோது முயல்கள் இரவு நேரங்களில் வந்து பயிர்களை சேதப்படுத்தியது. ஆதலால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்களில் காவல் இருந்து முயல்களை விரட்டி பயிர்களை பாதுகாத்தனர்.
பின்னர் படைப்புழு என்னும் நோய் மக்காச்சோள பயிர்களை தாக்கியது. இதற்கு தேவையான மருந்துகளை அடித்து மக்காச்சோள பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். தற்போது மக்காச்ேசாளமானது நன்கு வளர்ந்து கதிர் வாங்கி உள்ளது.
கிளிகளால் பாதிப்பு
இந்த கதிர்களில் உள்ள சோளத்தை கிளிகள் கொத்தி வருகின்றன. இந்த கிளிகள் வெயில் நேரங்களில் வருவது இல்லை. இப்போது தொடர்ந்து மழை பெய்துவருவதால் கிளிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. கிளிகள் மக்காச்சோளத்தை தாக்குவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கடன் வாங்கி சாகுபடி செய்தும், அதனை அறுவடை பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளிகளால் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், கிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.