பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள்

மாசிமக திருவிழாவையொட்டி குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் உள்ள பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

Update: 2023-03-05 19:15 GMT

மாசிமகத்திருவிழா

கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது. இங்கு ஆசியாவிலேயே உயரமான 33 அடி உயரம் கொண்ட குதிரை சிலை உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த விழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலை அணிவிப்பதும், மறுநாள் இரவு தெப்பத்திருவிழாவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஆயிரக்கணக்கான மாலைகள் குவிந்தது

பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக அணிவிக்கும் காகிதப்பூ மாலைகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கட்டப்பட்டு வந்தன. இந்த ஆண்டு மாசிமகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்கவும், கூட்ட நெரிசலைத்தவிர்க்கவும் குதிரை சிலைக்கு ஒரு நாள் முன்னதாக மாலைகள் அணிவிக்க அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு கிராமத்தின் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனையுடன் முதல் மாலையாக மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட சம்பங்கி, ரோஜா பூ மாலைகள், பழ மாலைகள், காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அணிவித்தனர். முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு குவிந்தது.

பால்குடம், காவடி

கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முதல் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் இன்று (திங்கட்கிழமை) இரவு வரையிலும் மாலைகள் அணிவிக்கப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. மாசிமக திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், அன்னதானம், தண்ணீர், நீர்மோர் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ முகாம், முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவை தயாராக உள்ளன.

திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்துள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்