கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெண்டரை ரத்து செய்யாவிட்டால் 126 ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜினாமாகூட்டாக அறிவித்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி டெண்டரை ரத்து செய்யாவிட்டால் 126 ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜினாமா செய்வோம் என்று கூட்டாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-13 18:45 GMT

கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிவாழை கோவிந்தராஜ், செம்படாக்குறிச்சி அய்யாத்துரை, மூங்கில்துறைப்பட்டு பரமசிவம் ஆகியோர் தலைமையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள் என அறிவுறுத்தினார்.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்ட பணிக்கான டெண்டரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் கட்டிடப் பணிகள் மற்றும் அனைத்து திட்டப்பணிகளும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத்தரகர்களை தவிர்த்திட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சம்பந்தப்பட்ட ஊராட்சியில் திட்டப் பணிகளை ஒப்பந்ததாரர் செய்திட வேண்டும். வேலை முடிவு சான்று தலைவர் வழங்கிய பின்னரே பணிக்கான தொகையை வழங்கிட வேண்டும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகளை விரைந்து வழங்கிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் இதுபற்றி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ராஜினாமா செய்வோம்

அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- டெண்டர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். இருப்பினும் சில ஊராட்சிகளுக்கு வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) டெண்டர் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். அப்படி ரத்து செய்யாவிட்டால் அன்றைய தினமே 126 ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்