புதர்மண்டி கிடக்கும் பாலாறு அணை பூங்கா
போதிய பராமரிப்பு இல்லாததால், பழனி பாலாறு அணை பூங்கா புதர்மண்டி கிடக்கிறது.
புதர்மண்டிய பூங்கா
பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையை பார்வையிட்டு செல்ல வாரவிடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுப்புற மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். மேலும் பாலாறு அணை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சனி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுடன் வரும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக பாலாறு அணை பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டது. அங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மான், சிங்கம் போன்ற மிருகங்களின் உருவங்கள், இருக்கைகள், நீரூற்று போன்றவை உள்ளன. ஆனால் இங்கு போதுமான பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் காலப்போக்கில் அணை பகுதி புதர்மண்டிய நிலையில் காட்சி தருகிறது.
அடிப்படை வசதி
குறிப்பாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை சுற்றிலும் புதர்கள் வளர்ந்துள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நகர் பகுதியில் எந்தவித சுற்றுலா வசதிகளும் இல்லாததால் பாலாறு அணைப்பகுதிக்கு சென்று பார்வையிடுகின்றனர். ஆனால் பூங்காவில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே அங்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.