பழனியில் வில் அம்பு எய்து மகிஷா சூரவதம்; இன்று நடக்கிறது.
பழனியில் நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக வில் அம்பு எய்து மகிஷா சூரவதம் இன்று நடக்கிறது.
பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக வில் அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) பழனி கோதைமங்கலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று பூஜை முறைகள் மாற்றப்பட்டு உள்ளன. அதாவது பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. அதையடுத்து 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை மதியம் 1.30 மணிக்கே நடக்கிறது. பின்னர் மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு புறப்பாடாகி செல்கிறது. அதையடுத்து கோவில் நடை அடைக்கப்படுகிறது. எனவே பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதைமங்கலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு மேல் வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது முத்துக்குமார சுவாமி வில் அம்பை எய்து மகிஷாசூரனை வதம் செய்கிறார். பின்னர் மீண்டும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வருகிறார். அதையடுத்து அங்கு அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து நாளை வழக்கம்போல் முருகன் கோவில் நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி விழாவையொட்டி நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.