நெல் கொள்முதல்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 8 லட்சத்து 36 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்தார்.

Update: 2023-09-10 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 8 லட்சத்து 36 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

8 லட்சத்து 36 ஆயிரம் டன் நெல்கொள்முதல்

தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 30-ந்தேதி வரை காரீப் பருவமாக செயல்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, கோடை நெல் சாகுபடி என முப்போகம் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டு சன்ன ரக நெல் 5 லட்சத்து 34 ஆயிரத்து 438 டன், பொது ரக நெல் 3 லட்சத்து 2 ஆயிரத்து 25 டன் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 463 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை

அதே நேரத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 7 லட்சத்து 96 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 40 ஆயிரம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்திற்கு 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் 3 ஆயிரத்து 909 டன், பொது ரக நெல் 709 டன் என மொத்தம் 4 ஆயிரத்து 616 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவைக்கு ஏற்ப உரிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்