அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

கரூரில் பெய்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-04 19:23 GMT

தொடர் மழை

கரூர் அருகே உள்ள சுக்காலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக அமராவதி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரைக்கொண்டு நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பொன்னி, ஐ.ஆர்.20 உள்ளிட்ட நெல் ரகங்கள் சுமார் 60 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நெற்பயிர்கள் அடுத்த வாரத்தில் அறுவடை செய்யப்பட இருந்தது. இந்தநிலையில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விழுந்தன. மேலும், நெல்மணிகள் கொட்டி வீணாகும் நிலை காணப்படுகிறது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- கரூர் மற்றும் அதன் சுற்று சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயலுக்குள் இருக்கும் தண்ணீர் வடிய இன்னும் 15 நாட்கள் ஆகும் என்பதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடியில் ஈடுபட்டோம். இந்தநிலையில் மழைநீர் புகுந்து நெல்மணிகள் சாய்ந்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் மகசூல் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்