படவேட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கணியம்பாடியில் உள்ள படவேட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-07-24 18:05 GMT

படவேட்டம்மன் கோவில்

கணியம்பாடி பஸ் நிலையம் அருகில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த விழாக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் உள்ள சிலைகள் வர்ணம் பூசப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டது.

கோவிலில் மூலவர் படவேட்டம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மூலவர் கோபுரம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை சீரமைக்கப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக பூஜை நடந்தது. இதில் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. மாலையில் நடந்த மூன்றாம் கால யாக பூஜையில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நான்காம் கால பூஜை மற்றும் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் சன்னதி, ராஜகோபுரம், விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகியவற்றில் புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீதும், நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் கோவில் தர்மகர்த்தா கே.வி.வெங்கடேசன், எஸ்.தியாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நித்யகுமார், ஜோதிலட்சுமி குரூப்ஸ் உரிமையாளரும், கணியம்பாடி ஒன்றிய கவுன்சிலருமான கே.எம்.ஜெ.விஸ்வநாதன், கணியம்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எம்.ராகவன், கோவில் விழா குழுவை சேர்ந்த கே.ஏ.சிவானந்தம், என்ஜினீயர் சங்கர், விஜயன், பாபுலால் சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

வேலூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்