திருப்பூர்-அவினாசி ரோட்டில் புறக்காவல் நிலையம் பூட்டி கிடக்கிறது

திருப்பூர்-அவினாசி ரோட்டில் புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது

Update: 2022-08-14 18:09 GMT

திருப்பூர்-அவினாசி ரோட்டில் புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது

திருப்பூர் மாநகரில் வடக்கு, தெற்கு, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, நல்லூர், கே.வி.ஆர்.நகர், வீரபாண்டி மற்றும் 2 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட 9 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த போலீஸ் நிலைய எல்லையின் தொடக்கத்தில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு தினமும் போலீசார் வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒருசில புறக்காவல் நிலையங்கள் செயல்படாமல் பூட்டியே உள்ளன.

இந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பூர்-அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே உள்ள புறக்காவல் நிலையம் பூட்டிய நிலையிலேயே உள்ளது. புறக்காவல் நிலையத்தையொட்டி சம்பந்தப்பட்ட காவல் நிலைய வார்டுகள் மற்றும் உங்கள் பகுதி காவலர்கள் என்ற வாசகங்களுடன் பதாகை உள்ளது. அதில் காவல் நிலையம், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஒரு தலைமை காவலர், ஒரு போலீஸ்காரர் ஆகியோரின் செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர் உள்பட 4 பேருமே தற்போது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இல்லை. அவர்கள் திருப்பூரில் வேறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கோரிக்கை

அவசர தேவைக்கு அப்பகுதி மக்கள் எஸ்.ஏ.பி. புறக்காவல் நிலையத்தை தேடி சென்றால் அது பூட்டிய நிலையில் இருப்பதால் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். திருப்பூரின் முக்கிய சாலையும், மாநகரின் எல்லைப் பகுதியுமான அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்