மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தா.பழூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மூளைச்சாவு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களுடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு திருவள்ளூரில் இருந்து வந்தவாசி நோக்கி தனது நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கார்த்தி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடல் கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.
மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.